6 வருடங்களுக்கு பின் பிறந்த ஊரை நோக்கிப்பயணம்..என்னதாயிருந்தாலும், பிறந்த மண்ணுல காலடி வெச்சா, உடம்புல ஒரு சிலீர் ஓடுமே..அந்த சிலீருக்காகத்தான், உயிர பணயம் வெச்சு, திரும்பவும் ஊருக்கு வாரேன்..
என்ன சார்..உயிரு.மயிருனு...முழங்காலுக்கும், மொட்டத்தலைக்கும் முடிச்சு போட்டு பேசரானேனு நினைக்கிறீங்களா?.. அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்.. மூணு நாள் தூக்கமில்லாம, பயணம் செஞ்சு பாருங்க..எதாவது பேசனுமுனா, குழப்பமா, எண்ணங்கள் உங்க மனசுல ஓடும்.
கொஞ்சம் இருங்க.. எங்க ஊர் வந்திடுச்சு..இறங்கிட்டு அப்புறம் சொல்றேன்..
.
.
அப்பாடா..என்ன இருந்தாலும் ஊர்..ஊர்தாங்க.. என்னா காற்று..என்னா குளிர்ச்சி..இதையெல்லாம் விட்டுட்டு, அசாமுக்கு ஓடிப்போனேனே..சே..
.
எம்பேரு முக்கியமில்லைங்க..நான் பொறந்து வளர்ந்தது இங்கதான் சார்..பெரிய குடும்பம் எங்களுடையது. அப்பா, விவசாயம்.. சட்டை போடமாட்டாரு.. நல்ல முறுக்கிவிட்ட மீசை.. வருசத்திற்க்கு ஒரு தடவை கறிச்சோறு..மீதி நாளெல்லாம் கஞ்சியும், கம்பங்கூழும்தான்...
ஏழையாயிருந்தாலும், மானம்தான் பெருசுனு சொல்ற பரம்பரைங்க.
அதோ தெரியுது பாருங்க கருவேலமரம்..அதுக்கு பக்கத்தில,இருட்டுல இருக்கிற முட்டி சந்துலதான், ராஜசேகரன போட்டு கும்மியெடுத்தேன்.......அடிச்சுட்டு அன்னைக்கு ஓடினவந்தான் சார்.. 6 வருசத்துக்கு பின் இப்பத்தான் வரேன்...நீங்களே சொல்லுங்க..ஒருத்தன் நான்தான் கடவுளுனு சொல்லிகிட்டு, காலையில பல்ல காட்டிட்டு, வெள்ள வேட்டி கட்டிகிட்டு, போறவரவங்களை தொந்தரவு பண்ணினா, கோவம் வருமா, வராதா?..
கரெண்ட் இல்லாத நாள்ல, வகைக்கு சிக்கினான் சார் அந்த நாதாரி..ஆசை தீர நொங்கெடுத்தேன். தக்காளி.. வெள்ளை வேட்டியெல்லாம், செம்மண் ஆயிடுச்சு..அடிச்ச அடியில பேச்சு மூச்சில்லாம மரத்துக்கடியில விழுந்துட்டான்.. அப்ப, ’எங்கப்பனோட மீசையும், நுங்கு செதுக்குற அருவாளும்’ மனசுக்குள்ள நிழலாடிச்சு சார்..உகூம்.. ஒரு நிமிசம் இந்த ஊருல
இருக்ககூடாதுனு..ஒரே ஓட்டம் சார்..ஊர விட்டு ஓடிப் போயிட்டேன்.அப்புறம் அசாம் காடு..டெல்லி, ஏன்.. காசி..எல்லமே சுத்திட்டேன்.......திடீர்னு மனசுக்குள்ள , சொந்த ஊருக்கு போடானு ஒரு குரல்.அதுதான் கிளம்பிவந்துட்டேன்.
.
.
என்னாச்சு சார்..போலீசுக்காரனுகளா நிக்கிறானுக..இருங்க..என்னானு பார்த்துட்டுவறேன்..
.
.
ஒண்ணுமில்லை சார்..சும்மா செக் பண்றாங்களாம்..வாங்க சார்.. டீ சாப்பிடலாம்..
.
.
மக்கள் திருந்திட்டானுகளா..எவனும் வேலைக்கு போகாமா சுத்திக்கிட்டு இருக்கானுக.. கிராமம் உண்மையா முன்னேறிடுச்சா...டீக்கு வேற, காசு வேனாமுனு சொல்றாங்க..
.
.
நிசமாவே என்னமோ நடந்திருக்கு.. இங்கிருந்த இருட்டு சந்து எங்க போச்சு?.முக்கியமா ஒரு விசயத்தை நோட் பண்ணுனிங்களா?
பிச்சக்காரன் எவனையும்மே காணல.....எங்க பார்த்தாலும் பளீருங்குது..
ஆகா.. நாம முன்னேறிட்டோம் சார்..இந்த சொர்கத்தை விட்டுட்டு , ஆறு வருசமா அல்லாடியிருக்கேனே.. நான் உண்மையிலேயே மடையன் சார்..
.
.
சரி சார்..ரொம்ப அசதியா இருக்கு.. ஒரு கட்டிங் போட்டுட்டு போயி படுக்கனும்..
.
.
என்னமோ ஆயிடுச்சு..
ஒருவேளை எவனாவது , எங்கஊரை, தத்தெடுத்துட்டானுகளா?..
இல்ல..கவருமெண்டு, பெட்ரோல் கிணத்தை ஏதாவது கண்டுபிடிச்சுட்டானுகளா?..... என்ன மாயமடா இது? கட்டிங் கேட்டா, சும்மாவே ஒரு புல் பாட்டில் கொடுக்கிறானுக..
.
.
.
எங்கப்பன் சொக்க தங்கம் சார்..,ஓடிப்போனவனை ஏத்துக்க ஒரு மனப்பக்குவம் வேணும் சார். கரெண்டே இல்லாம இருந்த எங்க பழைய வீடா சார் இது?..இப்ப பாருங்க..டீவி.. பேன்.. மெத்தை... வீதியில, காரு,பைக்கு சர்..சர்..னு போயிட்டிருக்கு... சட்டை போட்ட எங்கப்பன இப்பத்தான் பார்க்கிறேன்..பாக்கெட்ல பாருங்க 1000 ரூபாய் நோட்டு..
.
தெய்வம் சார் எங்கப்பன்..
கோழி, ஆடுனு ஒரே கறி சோறு போட்டு திக்குமுக்காட வெச்சுட்டாரு சார்..
.
.
நல்ல சாப்பாடு...ம்..பேனை போட்டுட்டு, மெத்தையில படுக்கற சுகமே தனிதான்..இருக்கற அசதிக்கு, நாளைக்குத்தான் எந்திரிப்பேன்...இனி இந்த ஊர விட்டு போனா, என்ன செருப்புல அடிங்க சார்..
.
.
.
மார்ச் 28 - 2010.......ஞாயிறு...காலை 6 மணி..
கொசு..புரண்டு படுக்கிறேன்..ஒரே புழக்கம்..
.
சே..அப்பா.. இந்த பேனை போடேன் -நான்
.
பதிலில்லை.
.
இது கனவா?.. இல்ல....
.
மெதுவாக வெளியே வந்தேன்..
.
காதில், கொசுக்களின் ரீங்காரம்..
வெறிச்சோடிய வீதி..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு..
.
அடுத்த தெருவில், “அம்மா..தாயே..”- ஒருவனின் குரல்..
தூரத்தில, ’கீரிச்..கீரிச்..’- பால்காரனின் சைக்கிள் சத்தம்..
.
.
.
ஆங்.. சொல்லமறந்துட்டேனே......
.
எங்க ஊரு பேரு....
”பென்னாகரம்” சார்....
.
.
.